பொருட்டமிழ் வேதம்

450.00

450.00

Quantity
Add to cart

மதிப்புரை: நயத்தமிழ் நெஞ்சன் ச.மு.தியாகராசன்

தமிழ் நூல் வேத வெளியீடுகளில் தற்போது நடை பயின்று வருவது இரண்டாம் வேதமாகிய ‘பொருட்டமிழ்’ வேதமாகும். அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு என்பதற்கொப்ப பொருள் என்பது

இன்று நாம் பயன்படுத்தும் பலவிதமான பொருட்களை மட்டும் குறித்த சொல் அல்ல. நம் புறவாழ்க்கை தொடர்புடைய அனைத்து விஷயங்களும் இதில் அடங்கும். இதை நமது பண்டைய சங்க இலக்கியங்களும், இலக்கணமும் விரிவாகப் பேசுகின்றன. இதன் வாயிலாக நமது மிக உயர்ந்த நாகரிகம், பண்பாடு வெளிப்படுகின்றது. ஆனால் இந்தச் சிந்தனையை நாம் வேற்று மொழிகளில் பார்க்க இயலாது.

1.தொல்காப்பியம் – புறத்திணையியல்

உலக வாழ்க்கையை எப்படி ஒரு மனிதர் வகுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்ததே புறத்திணையியல். இது தமிழர்களின் சிறப்பு. புறவாழ்க்கையைப் பற்றி பல வேறு கூறுகளை ஆழ்ந்த சிந்தனையோடு எடுத்து வைப்பது பொருட்டமிழ் வேதமாகும். இவற்றை ஆசிரியர் வழிநின்று பார்ப்போம். அக்காலத் தமிழர்கள் கணவன், மனைவியை இழந்தவர்கள் தவ வாழ்க்கையையே மேற்கொணடார்கள் என்பதைத் தொல்காப்பியம் காதலியிழந்த தபுதார நிலையும் காதலனிழந்த தாபத நிலையும் என்று குறிப்பிடுகிறது.

காஞ்சித்திணை: உலக நிலையாமையை முதலில் சொல்லி தொடர்ந்து பாடாண்தினையில் வீடுபேறு பெறவேண்டுதலைச் சொல்கிறது. நமது பழம்பெரும் இலக்கியங்கள், அழிவிற்கு ஆட்படாமல் காலத்தையும் மீறி உலா வருகின்றதென்றால் அதில் அமைந்துள்ள செய்யுள் உத்தி, எதுகை, மோனை, சந்தம் என்கின்றார் ஆசிரியர். பீடுடைய புறவாழ்க்கைக்கு அடிப்படை அறுவகையினர் வாழ்த்தலே ஆகும். இப்படிப் பாடியே திருஞானசம்பந்தர் புனல் வாதத்தில் வென்றார் என்பது வரலாறு. வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே இதே போன்று திருஞானசம்பந்தர் தமிழ் வேதம் பாடினார் தாளம் பெற்றார். சுந்தரரும் இது போன்றே பலமுறை இறைவனிடம் பெருஞ்செல்வம் பெற்றார் என்பது வரலாறு. புறத்திணையில் புறவாழ்க்கையின் பலப்பல கூறுகளை விவரித்து அறத்தொடு பொருட்களை ஈட்டி பொருள் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்று பலபட பொது இலக்கணம் வகுத்தவர் தமிழர்.

2.திருக்குறள்:

ஓர் அரசுக்கு 6 அங்கங்களாவன படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண். இது எக்காலத்திற்கும் உரியது. ஓர் அரசனின் இயல்பு அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் என மன்னனை இறைவனாகப் பார்த்த வள்ளுவர் இறைமாட்சி அதிகாரம் அமைக்கிறார். அரசனுக்கு இலக்கணம் வகுக்கிறார். சேர்க்கும் பொருட் செல்வம் எல்லாம் செலவாகி அழியும், எஞ்சினாலும் கூட வராது. ஆனால் கல்வியோ அழிவது இல்லை. இறந்த பின்னும் கூட வரும். ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்(பு) உடைத்து. கல்வியால் வரும் செல்வம் கேடில் விழுச் செல்வமாகும். அறிவினால் நன்மை விளைய வேண்டுமே தவிர தீமை விளையக் கூடாது. குற்றங்கடிதல் தலைப்பில் ‘குற்றமே காக்க பொருளாக’ என்று நமக்கு அறிவுறுத்துகிறார். கல்வியில் தொடங்கி – கல்லாமையில் சிறுமை காட்டி கேள்வியின் உயர்வைச் சொல்லி – இதன் மூலம் பெறும் அறிவே உண்மையான அறிவு என வலியுறுத்துகிறார். அடுத்து குற்றங்கடிதலை சொல்லி- அறிவில்லாதவர்களுக்கு மற்றும் அனுபவப் படாதவர்களுக்கு பெரியாரைத் துணை கொளச் சொல்கிறார். மேலும் சிற்றினம் சேராமையை உடனாக சுட்டிக் காட்டுகிறார். இவ்வாறு பலபட நம் வாழ்க்கை செம்மை பெற 70 அதிகாரங்களை பொருட்டமிழ் வேதமாக திருவள்ளுவர் மொழிந்ததை ஆசிரியர் கைக்காட்டுகிறார்.

3.நாலடியார்:

இவரும் கல்வியையே பொருட்பாலில் முதலாக வைக்கிறார். நன்மையுடைய கல்வியே உண்மையான அழகு ஆகும் என்றும் உண்ணும் உணவில் உப்பு போல ஆயிரம் தான் பொருள் இருந்தாலும் கல்வி இல்லை என்றால் செல்வத்திற்கு மதிப்பு இல்லை. கல்வியை திருட முடியாது. கல்விக்கு வரி போட முடியாது. ஆக கல்வி வாழ்க்கைக் கடலைக் கடக்க தோணியாகப் பயனாகிறது. பெரியோர் நட்பு காலை நிழல் போல் நீளும். தீயோர் நட்பு மாலை நிழல் போல பின்னே விழும், குறுகும். எவன் பிறருடைய துன்பம் துடைக்கின்றானோ அவனே செல்வந்தன். வறுமையை ஒப்புக் கொள்கிறது நாலடியார். மறுமைக்கு வித்து மயலின்றி செய்து சிறுமைப் படாதே நீர் வாழ்மின். முற்றுற்றும் துற்றினை நாளும் அறம் செய்து பிற்றுற்றுத் துற்றுவர் சான்றவர். ஆண்மை என்பது வடிவால் வருவது அல்ல. ‘இசையாது எனினும் இயற்றி ஓர் ஆற்றால் அசையாது. ‘பெண்டிரும் வாழாரோ மற்று’ நிற்பதாம் ஆண்மை’ என்ற கேள்வியை எழுப்புகிறார். கல்வி கரையில கற்பவர் நாள்சில மெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதின் ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப் பாலூண் குருகின் தெரிந்து எப்படி நூல்களை ஆராய்ந்து பார்த்து கற்க வேண்டும் என அன்னத்துடன் உவமிக்கிறார் நூலாசிரியர்.

4.புறநானூறு:

தொகை நூல்களில் புறப்பொருளைப் பற்றி விளக்கும் நூல் இது ஒன்றே ஆயினும் இது எல்லாவற்றையும் விஞ்சி நிற்பது. 20,000 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட முதுகுடுமிப் பெருவழுதி என்கிற பாண்டியன் மீது பாடிய பாடல்கள் சில புறநானூற்றில் கிடைக்கின்றன. தென்குமரியில் இந்துமாக் கடல் தோன்றுவதற்கு முன் தோன்றிய செய்யுட்களும், பின் பாரத, இராமாயண நிகழ்ச்சிகட்கு முன்னும் பின்னும் தோன்றிய செய்யுட்களும், திருவேங்கடத்தில் திருமால் கோயிலும், பழனியில் முருகன் கோயிலும் இராமேச்சுரத்தில் இராமலிங்கர் கோயிலும் தோன்றுவதற்கும் முன் தோன்றிய செய்யுட்களும் இப்புறநானூற்றில் தொகுக்கப்பட்டுள்ளன. இது தமிழ் நாகரிகத்தின் தொன்மை உணர்த்தும் பெருநூலாகும். பண்பாட்டுக் களஞ்சியமான இந்நூல் அக்காலத் தமிழர்களின் புறவாழ்க்கை எப்படி இருந்தது என்பதைக் கண்ணாடி போலக் காட்டுகிறது. வாழ்க்கையின் உள்ளே ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் எதிர் நின்று பண்பைத் தூக்கிச் சமாளிப்பது எப்படி என்பதற்குப் பல பாடல்கள் உள்ளன. இவை உலகத்திற்கே பாடமாவன. பழந்தமிழ் வேதமான இதை ஒவ்வொரு தமிழனும் படித்துப் போற்றிப் பயன் பெறுவார்களாக. ஆசிரியர் இக்களஞ்சியப் பாக்களுக்குப் பொருந்த தலைப்பிட்டுள்ளது ஒவ்வொரு உயரிய பாடலுக்கும் மகுடம் சூட்டியது போல் உள்ளது. தமிழ்ச்சிறப்பிற்கு மேலும் சிறப்பு (அணி) சேர்த்துள்ளார்.

5.பதிற்றுப்பத்து:

இது சேர மன்னர்களைப் பற்றிய நூல், அவர்களது வீரம், கொடை, அரசியல், நேர்மை ஆகிய அனைத்தும் இந்நூலில் காணலாம். சேர மன்னர்கள் காத்த நாடு புறவாழ்க்கையை அறத்தோடு நடத்துகின்ற நாடாக ஒளிர்ந்ததை இந்நூல் நெடுகக் காணலாம். மழை வேண்டிய இடங்களில் தாராளமாக வேண்டிய காலத்தில் பெய்ததாம். மக்களை வறுத்தும் நோய்கள் அதனால் இல்லை. பசியும் இல்லை. அதனால் அநீதியும் இல்லை. வளங்கள் கொழித்திருந்தனவாம். அரசனும் குடிகளும் பகுத்துண்டு வாழ்ந்தனர். தமிழ் அந்தணர்கள் பற்றிய பாடல் ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல் ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும் அறம்புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி ஏற்றல் – கையேந்துவது அல்லது பிறர்க்கு ஓதுவிக்க, பிறரை வேட்பிக்க அவர்கள் மனமுவந்து தருவது. தந்ததை இறைவன் இன்று தந்தது என்று நிறைவாக ஏற்றல். அது பிச்சை அன்று. அந்தணர்கள் வாங்கியதைப் பிறர்க்கு ஈகையும் மேற்கொண்டார்களாம். இதனாலேயே அவரை அறம்புரி அந்தணர் என்று பாடினார். இப்பதிற்றுப்பத்து இமய வரம்பன் என்ற ஒரு சேர மன்னனை அடையாளம் காட்டுகிறது. இமய மலையை வென்றவனுக்கு அங்கே உள்ளது சேரா பாஸ் இன்றைக்கும் உள்ள அடையாளமாகும். தமிழ் மன்னர்கள் பிற நாட்டின் மீது போர் தொடுப்பது மண்ணாசை காரணமாக அல்ல. எதிரியின் கொடுங்கோல் தன்மையாலே ஆகும் என்பது சங்கநூற் செய்தி.

6.பத்துப்பாட்டு:

இதில் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, நெடுநல்வாடை, பட்டினப்பாலை, மலைபடுகடாம், மதுரைக் காஞ்சி என 7 நூல்கள் பொருள் தமிழை அலங்கரிக்கின்றன. இவை யாவும் கடைச் சங்கக் காலத்தை சார்ந்தன. இவற்றைக் கண்ணாற் கண்ட காட்சிகளை நேரடியாக படம் பிடிக்கும் சொல்லோவியம், சொற்சித்திரம் எனலாம். அக்கால பழந்தமிழர் நாகரிகத்தை காட்டும் பூஞ்சோலைகள் எனலாம்.

சிறுபாணாற்றுப்ப்டை:

கூத்தர், பாணர், பொருநர், விறலியர் பரிசில் வாழ்க்கை வாழ்பவர்கள். 12 நரம்புகளை உடைய யாழை வாசிப்பவர் சிறுபாணர். 21 நரம்புகளை உடைய யாழை வாசிப்பவர் பெரும்பாணர். இவ்வகை ஆற்றுப்படையில் வள்ளல், அவனது நாடு, அங்குள்ள மக்களின் பண்பாடு, அறவாழ்க்கை, இவை பற்றிய தகவல்கள் எல்லாம் உள. இதனாலேயே அவை காலக் கண்ணாடி எனப்படும். இதில் கடையேழு வள்ளல்கள் பற்றிய பல தகவல்கள் சொல்லப்படுகின்றன. அதே போன்று சேர, சோழ, பாண்டியர் நாட்டின் பெருமைகளும் பேசப்படுகின்றன. நல்லியக்கோடனை நல்லூர் நத்தத்தனார் ஆசிரியப்பாவால் 269 வரிகளில் பாடியது இந்நூல்.

பெரும்பாணாற்றுப்படை:

இவ்வாசிரியப் பாட்டு 500 வரிகளில் உருத்திரக் கண்ணனாரால் தொண்டைமான் இளந்திரையனைப் பாடியது. ஏழை வேடுவச்சிகள் உணவு புல்லரிசி என்றும் அதை சமைப்பது எப்படி என்றும் சிறிது வளமுடைய வேடுவர்கள் உணவு நெல் அதன் சோறு பேரிச்சம்பழ அளவில் இருக்கும் என்றும் வரகரிசி சோற்றை அவரைப் பருப்புடன் உழவர் உண்டனர் என்றும் ஆயர்கள் தினைச் சோற்றையும் உண்டனர் என்றும் தமிழ் பார்ப்பார்களே அறுசுவை உணவை உண்டனர் என்றும் அவரிடம் புலால் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்கள் வகுப்பு வேற்றுமைபாராதவர் என்பதும் செய்தி. வேளாளர் சைவர்களாக வாழ்ந்தனர். நகரில் பல மாடிக் கட்டிடங்கள் இருந்தன. காஞ்சி நகரில் வீதியில் எப்பொழுதும் தேர்கள் ஓடிக் கொண்டிருந்தனவாம். அரசன் அறநெறி வழுவாது ஆட்சி புரிந்தான், கொடுமை செய்யாத சுற்றம் உடையவனாய் இருந்தான். அவன் ஆட்சியில் இடி விழுந்ததில்லை. பாம்பு கடித்ததில்லை. கிரேக்கத்திலிருந்து குதிரைகள் இறக்குமதியாயின.

பொருநர் ஆற்றுப்படை:

முடத்தாமக் கண்ணியார் கரிகால் சோழனைப் பாடியது 248 வரிகளில். இவன் இமயம் வென்றதைக் குறிக்கும் வகையில் அங்கு சோழா பாஸ் என்ற இடத்தைப் பார்க்கலாம். இவனாட்சியில் இசைக்கலை மிக உயர்ந்த நிலையில் இருந்தது. ஒரு பாடிணி காட்டு வழியில் பாடி வருகையில் அவ்விசை கேட்ட ஒரு யானை அதற்கேற்ப ஆடியதாம். அதே போன்று பொருநர் கூட்டம் பரிசில் பெற்று வருகையில் கள்வர்கள் ஆயுதங்களுடன் மறிக்க, உடனே பொருநர் பாலைப் பண்ணைப் பாடி வாசித்தார்களாம். அவ்விசை அவர்களை மயக்கி அடி பணிய வைத்ததாம். நெசவுத் தொழில் உச்சத்திலிருந்தது. உண்பதற்கு முன் காக்கைக்குச் சோறிடும் பழக்கம் இருந்தது. வாணிபம் பண்டமாற்றாக இருந்தது. 1 வேலி நிலத்தில் 1000 கலம் நெல் விளைந்ததாம் (1 ஏக்கர் – 5 டன்) தவம் செய் முனிவர்கள் தம் உடல் கீழே விழாது இறையடி சேர்ந்தனர். தவம் செய் மாக்கள் தம்உடம்பு இடாது அதன் பயன் எய்திய அளவை மான

நெடுநல் வாடை :

நக்கீரர் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியது 188 வரிகளில். வாடைக் காற்றை மையமாகக் கொண்டு பாடப்பட்டது. தமிழர்கள் புது வீடு கட்டும் போது நல்ல நாள் பார்த்து இறைவனை வணங்கி கால் கோல் இடுவார்கள். கட்டிட வேலையை நல்ல நேரத்தில் நூல் பிடித்துத் தொடங்குவர். மதுரையில் ஆங்கங்கே கோட்டை, மாட, மாளிகை, சூளிகை (அடுக்குமாடி) ஆகியன அரசு ஒப்புதல் பெற்றே கட்டப்பட்டன. அரசனின் அந்தப்புரம் எப்படி அமைத்தனர். ‘கருவில்’ என்ற பெயரே (கர்ப்பகிரகம்) முக்கியத்துவம் பெற்று அலங்கரிக்கப்பட்டது. தந்தக் கட்டிலின் மேலே சித்திரத் துணிகளில் சந்திரனும் உரோகிணியும் சேர்ந்திருப்பது போல ஓவியம் எழுதப்பட்டிருந்தன. தம்பதியர் மனம் ஒத்து இருந்தனர். திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து என்ற வரிகளை நம் ஆசிரியர் சரியான கருதுகோளுடன் நுண்ணிய அறிவுடன் விளக்கியது பலரது தவறான விளக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆயிற்று. தமிழாண்டு சித்திரையில் தொடங்குவது அல்ல என்பதை இடப்பகுப்பு வேறு காலப் பகுப்பு வேறு என்றதன் மூலம் தெளிவுபட நிறுவியுள்ளார்!.

பட்டினப்பாலை:

301 வரிகளில் ஆன பாலைத்திணை அகத்துறை சார்ந்தது. ஆனால் இந்நூல் காவிரிப் பூம்பட்டினத்தின் புற வாழ்க்கையை பெரும்பான்மையாக விவரிப்பதால் பொருட்டமிழ் வேதத்தில் சேர்க்கப்பட்டது. புலவர் உருத்திரங்கண்ணனார் காவிரிப்பூம்பட்டினத்தின் செழுமையைப் படம் பிடித்துள்ளதே இந்நூல் ஆகும். கரிகால் சோழனின் ஆட்சிச் சிறப்பு வெளிப்படுகிறது. 16 இலட்சம் பொன் பரிசாகப் பெற்ற பாடல் இதுவாகும்! காவிரியும் அது கடல் சேர் பட்டினமும் பொன் கொழித்தது என்பதை கீழே காண்க: வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடற் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும். ‘சோறுவாக்கிய கொழுங்கஞ்சி ஆறு போலப் பரந்து ஒழுகி’ என அறச்சாலைகளின் நிலையைக் காண்கிறோம். துறைமுகத்தில் குதிரை இறக்குமதி, மிளகு, சந்தனம், அகில், முத்து, பவளம், உணவுப் பொருட்கள் ஏற்றுமதி ஆயின. வணிகர்கள் பண்டங்களின் உற்பத்தி விலை, வரும் லாபம் இவற்றைக் கூறி கூவிக்கூவி விற்றனராம். இவ்விவரங்களைப் பண்டங்களின் மேலே ஒட்டி வைப்பார்களாம். என்னே அவர்களின் வணிக நேர்மை! வேளாளர்கள் இங்கே தெய்வத்தை நோக்கியே வேள்வி செய்தார்களாம். (இதுவே தமிழ் வேள்வி) உழவர் அந்தணராக தத்தம் அறமே தலைப்பட்டு நின்றனர் என்று பதிவு செய்கிறார். நகரில் பல்வேறு கொடிகள், திருவிழா, அறிஞர் சபை, பட்டிமன்றம், கள்விற்பனை என எங்கும் உயரப் பறந்து பறைசாற்றியதுடன் நகருக்கு நிழலையும் கொடுத்தனவாம் . நாட்டில் பல மொழியினர், பல நாட்டினர், அவர்தம் குடியிருப்புகள் இருந்தனவாம். இப்படிப் புற வாழ்க்கைச் செய்திகள் பலப்பல நமக்கு கிடைக்கின்றன.

மலைபடுகடாம்:

மலையிலே தோன்றும் ஓசைகளை வரிசைப்படுத்தி 20ஐ காட்டிக் கொடுக்கிறது இந்நூல். பழந்தமிழர் இயற்கையோடு இயைந்து சென்றனர். இயற்கையின் வழியில் குந்தகமின்றி இயற்கையைப் பயன்படுத்தும் அறிவுக்கூர்மை உடையவர்களாக தமிழர்கள் இருந்தனர். இயற்கையை இயற்கையாகத் தரிசிக்க ‘மலைபடுகடாம்’ உதவுகிறது, 583 வரிகளில்! இன்றைய செங்கம் நகர் செங்கண் மாநகர் என்ற பெயரிலே சேயாற்றின் கரையிலே அமைந்த நகர். இப்பகுதி வாழ் மக்களின் மனவளங்களை இதர வளங்களுடன் மன்னன் நன்னனை ஒருசேரக் காட்டுவதே இந்நூலின் பெருஞ்சிறப்பு.

மதுரைக்காஞ்சி:

782 வரிகளில் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது. உலகு, பொருள், புகழ், நிலையாது என ஆளும் அரசனுக்கு உணர்த்திப் பாடியது தான் இந்நூல். நிலையாமையை (காஞ்சித்திணை) உயர் தனிக் குறிக்கோளாக, இலக்காய் வைத்து வாழ்வதே சிறப்பு என்கிறார். வாழ்க்கையை உணர்ந்து வாழ்ந்து அதைப் பெருவீரனுக்கும் மன்னனுக்கும் அதன் மூலம் வரும் தமிழ்க் குடிகளுக்கும் குறிப்பால் உணர்த்துகிறார்! என்னே புலவரின் தூநெறி! வெறும் 27 பாடல் வரிகளில் மட்டுமே நிலையாமையைக் கூறுகிறார். அறிவுரை குறிப்பாகவே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஏனெனில் அதுவே மனதில் ஆழப்பதியும். புறத்தினை வகுத்த தொல்காப்பியம் ‘நிலையாமை உணர்வு’ எனும் வாழ்க்கை நிலையை இறுதியில் வைத்து காஞ்சித்திணை என்று காட்டியது. இதுவே இப்பாட்டின் மையக்கருத்து. நம் வாழ்க்கையின் மையக்கருத்தாகவும் இருக்க வேண்டும். அக்கால மதுரையின் சிறப்புகளை எல்லாம் விரிவாகப் பதிவு செய்கிறது. மதுரை மாநகர் தாமரை மலர் விரிந்தது போன்றும் நடுப் பொகுட்டு அரண்மனை போன்றும் இருந்தன என்று படம் பிடிக்கிறார் ஆசிரியர். அனைவர்க்கும் செய்தியாக – கொடையாக – தமிழர் கொண்ட உள்ளத்துறவே தமிழர் நெறி என்றும் அது வேடத்துறவல்ல என்றும் பொருளில் இறுதியில் உவர்ப்பு தோன்ற வேண்டும் என்றும் கூறுகிறார். பொருளைக் கொண்டே அனுபவித்துப் பின் நிலையாமை உணர்வுக்குச் செல்ல வேண்டும். நிலையாமையே வீடு பேற்றிற்கு அழைத்துச் செல்லும். ஆக இந்த உண்மைப் பொருளை உணர்ந்து நாம் உண்மைப் பயனைப் பெறுவோமாக! பாண்டியனே உன் முன்னோடிகளில் ‘பல்யாகசாலை முதுகுடுமியின் நல் வேள்வி’ துறை போகிய தொல்லாணை நல்லாசிரியர் நிலந்தரு திருவின் நெடியோன் போல வியப்பும் சால்பும் செம்மைச் சான்றோர் போல நின்புகழ் பரவுக என்கிறார். ஆக புறவாழ்க்கை உவப்பு, உவர்ப்பாக மாறிப் பின் பெரும் பொருளாகிய பரம்பொருளை அடைய செம்மைச் சான்றோரின் நெறி பற்றி வாழ வேண்டும் என்பதை நாம் இலக்காகக் கொள்ள வேண்டும் என்பது நம் கொள்கை குறிக்கோளாக முடிந்த முடிபாக இருக்க வேண்டும் என்பது ஆசிரியரின் பெருவிருப்பம் எனலாம்.

Recently Viewed Books

Add to cart Quick view Wishlist

இறப்பு-விஞ்ஞானம்-இனிய சைவ சித்தாந்தம்

₹150.00 (0)
Add to cart Quick view Wishlist

தமிழ் வேதம் புத்தகங்கள்

₹1,850.00 (0)
Add to cart Quick view Wishlist

பொருட்டமிழ் வேதம்

₹450.00 (0)
Add to cart Quick view Wishlist

தமிழரின் வேதம் எது ஆகமம் எது

₹150.00 (0)
- 11% Add to cart Quick view Wishlist

இன்பத்தமிழ் வேதம் 2 தொகுதி

₹800.00 (0)
Add to cart Quick view Wishlist

அறத்தமிழ் வேதம்

₹450.00 (0)
X